கோவை: 20 ஆண்டு காலம் இலக்கு வைத்து செயல்பட்டால், இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழைக் கொண்டு வந்துவிடலாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை அரசூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: “20 ஆண்டு காலம் இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழைக் கொண்டு வந்துவிடலாம். ஏ.ஆர்.ரகுமான் ஆசைதான் எங்களின் ஆசையும்.
இங்கு தமிழை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி, தமிழைப் பயிற்று மொழியாக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய முன்வந்தால் பாஜக உடன் நிற்கும். தமிழ் மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது. 5 முறை ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்து இருக்கின்றது?
சர்வதேச அளவில் தமிழை வளர்க்க குழு அமைத்து செயல்பட வேண்டும். அமித் ஷா உள்துறை அமைச்சராக பேசியிருக்கிறார். தமிழை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினால், எங்கள் கருத்தை தெரிவிப்போம். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் முதலிடத்தில் உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்தி இருக்கிறது.
சட்டப்பேரவையில் தேவையில்லாத விவகாரங்களை பாஜகவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?. தேவையில்லாத வேலையை செய்வது தமிழக முதல்வர்தான். வரலாறு எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். 10 மாதங்களாக கேலி செய்யும் அளவில்தான் தமிழகத்தில் ஆட்சி இருந்து வருகிறது” என்று அவர் கூறினார்.