புதுடெல்லி: ஒமைக்ரான் எக்ஸ்.இ என்ற உருமாறிய கரோனா வைரஸ் நிலவரம் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதிய வகை தொற்றுக்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கரோனா நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும்படியும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தகுதியானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுவேகத்தில் மேற்கொள்ளும்படியும் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
இதில் நிதி ஆயோக் உறுப்பி்னர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராமா பார்கவா, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் என்.கே.அரோரா மற்றும் மத்திய சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.