புதுடில்லி:”எதிர்காலத்தில், போர் என்பது ஆயுதம் சார்ந்ததாக மட்டும் இருக்காது. அவை, ‘கம்ப்யூட்டர் வைரஸ்’ முதல், ‘ஹைப்பர்சானிக்’ ஏவுகணை வரை, பல்வேறு வடிவங்களில் இருக்கும்,” என, நம் விமானப்படை தலைமை தளபதி விவேக் ராம் சவுத்ரி தெரிவித்தார்.
டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில்,அவர் பேசியதாவது:போர்க் களத்தை வடிவமைக்கும் நவீன கருவிகளாக, இணையவெளி மற்றும் தகவல் துறை மாறி உள்ளது. மனிதர்கள் இடையிலான தகவல் தொடர்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நம் இணையவெளியில் நடத்தப்படும் ஒரு தாக்குதல், ஒட்டுமொத்த கட்டமைப்புகளையும் முடக்கிவிடும்.நம் மீதான தாக்குதல், எந்த வடிவிலும் நிகழ்த்தப்படலாம்.
அவை, பொருளாதார நெருக்கடி முதல், துாதரக அளவில் தனிமைப்படுத்துதல் வரை இருக்கலாம். ராணுவ ஆக்கிரமிப்பு முதல், தகவல் இருட்டடிப்பு வரை இருக்கலாம். போரில் முதல் குண்டு பாய்வதற்கு முன், இவை அனைத்தும் நிகழ்த்தப்படும்.
எதிர்கால போர் ஆயுதங்கள் என்பது, கம்ப்யூட்டர் வைரஸ் முதல், ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்சானிக் ஏவுகணை வரை, எதுவாகவும் இருக்கும்.எனவே, எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement