கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய பெண் கைது

கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது எலப்புள்ளி கிராமம். இங்கு நென்மேனி என்ற இடத்தில் வசிப்பவர் ‌ஷமீர். இவரது மனைவி ஆஸி (22). இவர்களது மகன் முகமது ஷானு (3).
சில கருத்து வேறுபாடுகளால் கணவன்- மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று மாலை சிறுவன் முகமது ஷானு வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தான்.
தனது மகன் திடீரென இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி ஆஸி கண்ணீர் வடித்தார். ஆஸியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சை அடக்கி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் தாயார் ஆஸியை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது அவர் தான் பெற்ற மகன் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
கணவரை பிரிந்து வாழ்ந்த ஆஸிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ சிறுவன் முகமது ஷானு தடையாக இருப்பதாக ஆஸி கருதினார். இதனால் முகமது ஷானுவை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடி உள்ளார்.
இதையடுத்து ஆஸியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.