ஹைதராபாத்: குடிபோதையில் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது பிரச்னை ஆனதால், போலீசார் முன்னிலையில் இருவரும் பிரிந்தனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த, 22 வயது ஆட்டோ டிரைவர், அருகில் உள்ள மதுக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அங்கு, அவருக்கு 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், 1ம் தேதி இருவரும் அதிகமாக மது குடித்துள்ளனர். போதையில் இருந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அருகிலுள்ள ஜோகிநாத் கோவிலில் வைத்து இளைஞருக்கு ஆட்டோ டிரைவர் தாலி கட்டி உள்ளார். பின், இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். சில நாட்கள் கழித்து, ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு வந்த இளைஞர், அவரது பெற்றோரிடம் தங்கள் திருமணம் குறித்து கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து துரத்தினர். உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்ற அந்த இளைஞர், சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.’தனக்கு திருமணம் முடிந்ததை அறிந்து வீட்டில் இருந்து துரத்தியதால், ஆட்டோ டிரைவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிடில், வாழ்க்கை நடத்த 1 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என, இளைஞர் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில், இளைஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்ததாக ஆட்டோ டிரைவரின் பெற்றோர் எழுதி வாங்கினர்.
Advertisement