கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள தடுப்பூசி தான் ஆயுதம்: மந்திரி சுதாகர்

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பரவலை தடுக்க சிறப்பான முறையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதே போல் கொரோனா 4-வது அலையை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசிகளை மக்கள் பெற்று அந்த வைரசுக்கு எதிராக போராட வேண்டும். பல்வேறு நாடுகளில் முன்பும் பல வகையான வைரஸ்கள் பரவின.

ஸ்பானிஸ் வைரஸ், பிளேக் போன்ற தொற்று நோய்கள் பரவின. இந்த நோய்கள் பரவிய காலத்தில் மக்கள் ஊர்களையே காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். ஸ்பானிஸ் வைரசால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழந்தவர்கள் தான் அதிகம் என்று ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால் பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் கொரோனா நெருக்கடி காலத்தில் ஏற்பட இருந்த பெரிய ஆபத்து தடுக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் ஏழைகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று பல்வேறு வளர்ந்த நாடுகள் கூறின. ஆனால் பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கூறினார். நமது நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது சரியான முறையில் பின்பற்றப்பட்டது.

நாட்டில் இதுவரை 186 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 10 வகையான கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 80 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. கர்நாடகத்தில் இதுவரை 10.54 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு விலகி செல்லவில்லை. அது வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. தற்போது ஒமைக்ரானில் புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இவற்றுக்கு எதிராக போராட தடுப்பூசி ஒன்றே ஆயுதம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.