கும்பகோணம்: கொலை வழக்கில் கூலிப்படை தலைவனுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் செந்தில்நாதன் (35). இவர், அருகில் உள்ள திப்பிராஜபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (எ) கட்டை ராஜா (43). இவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர், கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்தார்.
கட்டை ராஜாவிடம் செந்தில்நாதன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், பணத்தை திரும்பித் தரும்படி செந்தில்நாதனிடம் கட்டை ராஜா பலமுறை கேட்டும், அவர் பணத்தை திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி தனது டாஸ்மாக் பாரில் செந்தில்நாதன் இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கட்டை ராஜா மற்றும் அவரது தாய்மாமன்களான திப்பிராஜபுரத்தைச் சேர்ந்த மனோகர், ஆறுமுகம் (50), மைத்துனர் மாரியப்பன் மற்றும் தம்பி செல்வம் (40) ஆகிய 5 பேர் சேர்ந்து செந்தில்நாதனை மிரட்டி தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த செந்தில்நாதனின் தந்தை சுவாமிநாதன் அவர்களை பின்தொடர்ந்து தேடிச் சென்றுள்ளார். பின்னர், திப்பிராஜபுரம் பாலத்தின் அருகே வைத்து, பணத்தை திருப்பித் தரும்படி செந்தில்நாதனை கட்டை ராஜா தரப்பினர் மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுவாமிநாதன், உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் கண்முன், செந்தில்நாதனை கட்டை ராஜா உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீஸார் அங்கு சென்று செந்தில்நாதனின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டை ராஜா, மனோகர், ஆறுமுகம், மாரியப்பன், செல்வம் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில், மாரியப்பன், மனோகர் இருவரும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர்.
இதனிடையே நாச்சியார்கோவிலில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கு தொடர்பாக கட்டை ராஜாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செந்தில்நாதன் கொலை தொடர்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில், மொத்தம் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பெஞ்சமின் ஜோசப் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கட்டைராஜா மீது 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருப்பதாலும், செந்தில்நாதனை அவரது தந்தை கண்முன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாலும், கட்டை ராஜாவை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம், செல்வம் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டைராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உள் ளிட்ட ஏராளமான போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
கும்பகோணம் நீதிமன்ற வரலாற்றில், ஒரு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப் பிடத்தக்கது.