தென்காசி:
நெல்லை, தென்காசி, தூத்துக்கடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக
கோடை மழை
பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று திசையன்விளை, ராதாபுரம், களக்காடு, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது சாக்கடை கழிவுகளும் மழைநீரில் கலந்து கோவிலுக்குள் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, மணிமுத்தாறு, பாபநாசம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. காலையில் வெயில் அடித்து வரும் நிலையில், மாலையில் பெய்யும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
அதிகபட்சமாக நாங்குநேரியில் 64 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 50 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகர பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் அங்கேயே குளம்போல் தேங்கி கிடந்தது. தொடர்
கோடை மழை
யால் சாலைகள் பள்ளங்களாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனமழை பெய்தது.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக கிராமங்கள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சங்கரன்கோவில் மற்றும் தென்காசி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுரண்டை பகுதியில் பெய்த மழையால் பள்ளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மாணவர்கள் பள்ளி செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி, ராமநதி, கடனா மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 11.6 சென்டிமீட்டரும், சங்கரன்கோவிலில் 10.8 சென்டிமீட்டர் மழையும், தென்காசியில் 10.04 சென்டிமீட்டர் மழையும் கொட்டித்தீர்த்துள்ளது.
குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக இந்த மாதத்தில் தண்ணீர் வரத்து இருக்காது.
தற்போது தொடர் கோடைமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். ஜூன், ஜூலை மாதங்களில் நிலவும் சீசன் காலம் போல குளுகுளு நிலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
காடல்குடி, வேடநத்தம், விளாத்திகுளம், சூரன்குடி, கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாத்தான்குளம், கயத்தாறு, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது.