சென்னை: சமத்துவ நாளான அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் திமுக தொண்டர்கள் அனைவரும் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்காக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இன்று அறிவித்துள்ளேன்.
சமத்துவ நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் அண்ணல் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 238 சமத்துவபுரங்களில் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன்பு புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத்தினர் மரியாதை செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாடிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.