`இளைஞர்கள் அனைவரும் சாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் முன்னேற வேண்டும்’ என இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி உபா ராஷ்டிரபதி நிவாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தெலுங்கு மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது, “நீங்கள் எப்போதும் சாதி, மதம் மற்றும் பிராந்தியம் போன்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் முன்னேற வேண்டும். பிற மதங்களை ஒரு போதும் அவமதிக்காதீர்கள்.
இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் வாசிப்பு போன்ற நற்குணங்களைக் கொண்டு வெற்றிகரமான தலைவர்களாக வளர வேண்டும். சகிப்புத்தன்மையற்ற ஒருவர் தலைவராக முடியாது. தலைவர் என்பவர் திறமை, நல்ல நடத்தை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், “ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வியானது அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டும். பிற மொழிகளிலும் அவர்கள் புலமை பெறலாம்” என்றும் வெங்கையா நாயுடு கூறியிருந்தார்.