திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதுடன், ஆட்டோக்களுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்து உள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம், நாளை மறுதினம் (15-ம் தேதி) தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்கா பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள தகவலின்படி,
“சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருதற்காக மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்க முன் வந்துள்ளனர்.
இதற்காக 50 தனியார் பேருந்துகள் 16 தனியார் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பக்தர்களின் வசதிககாக, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரி மைதானம் வரை, மற்றும் அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோயில் வரை மற்றும் திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை தனி நபர் ஆட்டோ கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேட்டவலம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை, மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை, அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை, நல்லவன் பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரை, பச்சையப்பன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை, தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை தனி நபர் ஆட்டோ கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள 950 உள்ளூர் ஆட்டோக்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனிநபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-232266 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கிரிவலப் பாதையில் எந்த இடையூறும் இல்லாமல் பக்தர்கள், பொதுமக்கள் சென்றுவர வருவாய்த் துறை, போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இணைந்து செயல்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.