சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சராகப் பதவியேற்ற ரோஜா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
1999ம் ஆண்டு முதலே அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தெலுங்கு மகிளா தலைவியாகப் பதவி வகித்தார். அதன்பின் 2009ம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அக்கட்சியை விட்டு விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன் பிறகு 2019ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
|
தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்த போது ரோஜா அமைச்சர் ஆவார் என்று சொன்னார்கள். ஆனால், ரோஜாவை ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ரோஜாவை ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக நியமனம் செய்தார் முதல்வர். அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட ரோஜா இன்று தன்னுடைய அலுலவகத்திற்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
“சுற்றுலா மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டேன். அலுவலகத்தில் சிறப்பு பூஜைகளைச் செய்து பொறுப்புகளை ஏற்றேன்,” எனப் பதிவிட்டுள்ளார். அப்போது அவரது கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்கே செல்வமணி, ரோஜாவின் மகன், மகள் ஆகியோர் இருந்தனர். முன்னதாக தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.