”உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறிய தப்பு செய்தால் கூட பெரிய கெட்டப் பெயரை வாங்கி கொடுத்துவிடும். மிக கவனமாக பணியாற்ற வேண்டும்” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் துணை மேயர்கள், 138 நகராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்,
“மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள் . இதையே பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திடாது. வாய்ப்பை வீணாக்கிவிட கூடாது.மக்களிடையே நம்பிக்கையை பெற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் மக்களாட்சி தத்துவத்திற்கு ஊரு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கழக அரசு அதனை சீர்செய்துள்ளது. இளம் பிரிதிநிதிகள் , புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதனை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக உணருங்கள். நான் மேயராக பொறுப்பேற்ற உடன் கடந்த கால நடைமுறைகளை மாற்றினேன். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றினேன். மக்கள் கொடுத்திருப்பது பதவி அல்ல மேயர் பொறுப்பு. இதனை உணர்ந்து பொறுப்பாக பணியாற்ற வேண்டும் என கலைஞர் எனக்கு அறிவுறுத்தினார். இதையேதான் நானும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
கே.என். நேரு வேகமாக சுறுசுறுப்பாக பணியாற்றுவார். அதனால் தான் அவரை இந்த துறை அமைச்சராக தேர்வு செய்தேன். நேருவின் வேகத்தை நீங்கள் மேடையில் கூட பார்த்திருப்பீர்கள். மற்றொரு விசயம், அவர் மனைவியை கொஞ்சும் போது கூட வேகமாகவே கொஞ்சுவார். உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறிய தப்பு செய்தால் கூட பெரிய கெட்ட பெயரை வாங்கி கொடுத்துவிடும். மிக கவனமாக பணியாற்ற வேண்டும் விதிமீறல் எந்த சூழலிலும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்பதே நமது இலக்கு. இதனை செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM