சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் முற்றிலுமாக கொரோனா தொற்று ஒழிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வார்டுகள் காலியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்று, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 29 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக குறைந்து, கொரோனா வார்டு மூடப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லாத நிலை உருவாகி உள்ளது. அதன்படி, ராஜீவகாந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம், ஓமந்தூரார் கிண்டி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.