சென்னையில் கூவம் ஆற்றங்கரையில் உள்ள தீவுத் திடலில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெங்கடேச பெருமாளின் சீனிவாச கல்யாண உற்சவ விழாவுக்கு, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை முறைப்படி நேரில் அழைப்பு விடுத்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் தீவுத் திடலில் ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணி முதல் சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. திவுத்திடலில், சீனிவாச கல்யாண உற்சவ விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாண உற்சவத்தை ஒரே நேரத்தில், 1.5 லட்சம் மக்கள் காணும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனிவாச கல்யாண உற்சவத்துக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, சென்னை தீவுத் திடலில் நடைபெற உள்ள சீனிவாச கல்யாணம் உற்சவ விழாவுக்கு வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
சென்னையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச கல்யாணம் உற்சவ விழா நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 ஆண்டுகள் திருப்பதி தேவஸ்தானம் சென்னையில் நடத்தவிருந்த சீனிவாச கல்யாணம் உற்சவம் தள்ளிப்போனது. கோவிட் தொற்று பரவல் தனிந்த நிலையில், தீவுத் திடலில் நடைபெறும் சீனிவாச கல்யாணம் உற்சவம் விழாவுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி, உள்ளூர் ஆலோசனைக் குழு (எல்.ஏ.சி) தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”