ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்னர், லேணர் லைசன்ஸ்க்கு நேரில் சென்று விண்ணப்பிக்க நேரமில்லாமல் சிரமப்படுகிறீர்களா? லைன்ஸ் புதுப்பிக்க ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல நேரமில்லையா உங்களுக்காகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு செம உத்தரவு பிறப்பித்துள்ளார். பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு நேரில் போகாமலேயே பெறும் புதிய சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இன்றைய காலத்தில் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனமாவது இருக்கிறது. இருசக்கர வாகனம் தனிநபர் போக்குவரத்துக்கு அவசியமானதாகிவிட்டது. அதே போல, கார் போன்ற வாகனங்களும் பெருகி வருகிறது. வாகனம் வைத்திருக்கும் அனைவரும், வாகனத்தை ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பலரும் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்று அதன் அலுவலக நடைமுறைகளை முடிக்க வேண்டுமே என்ற சிரமத்தால் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்னதாக பழகுநர் உரிமத்துக்கு (லேணர் லைசன்ஸ்) விண்ணப்பிக்காமல் கால தாமதம் செய்வதுண்டு. அதே போல, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் போன்றவற்றை செய்ய ஆர்.டி.ஓ அலுவலகம் சென்றால் ஒரு நாள் வீணாகிவிடும். ஒரு நாளில் முடிந்தால் பரவாயில்லை, கூடுதலாக 2 -3 நாட்கள் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பலரும் அவை தொடர்பான வேலைகளை தள்ளிவைத்தே வருகின்றனர்.
ஓடுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது, பழகுநர் உரிமம் பெற, முகவரி மாற்றம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றை ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லாமலே, இந்த சேவைகளைப் பெறும் (Contactless Service) வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே, http://www.parivahan.gov.in இணையதளம் வாயிலாக பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகளை ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பெறும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.” என்று தெரிவித்துள்ளது.
அதனால், இனி ஆர்.டி.ஓ ஆபீஸ் போகமலே, லேணர் லைசன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் போன்ற சேவைகளை ஆன்லைன் வழியாகப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“