புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 4-ந் தேதி ஆயிரத்திற்குள் வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், பின்னர் சற்று உயர்வதுமாக உள்ளது.
கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் இருந்த நிலையில், இன்று பாதிப்பு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 298 பேருக்கு தொற்று உறுதியானது. இதே போல டெல்லியில் தினசரி பாதிப்பு 202 ஆக உயர்ந்துள்ளது. அரியானாவிலும் புதிதாக 149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் மேலும் 26 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட 19 மரணங்கள் அடங்கும். இதுதவிர மகாராஷ்டிரத்தில் 4, டெல்லி, ஒடிசா, பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,21,736 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,081 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 5 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 10,870 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 19 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 15,05,332 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 7 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 79.49 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,29,323 மாதிரிகள் அடங்கும்.