மும்பை: இந்தியாவை பொறுத்தவரை, அதிக அளவில் தங்கம் வாங்கி குவிப்பது, மத்திய தர வர்க்கத்தினர் தான் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
‘இந்தியா கோல்டு பாலிசி சென்டர்’ நிறுவனம், கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டு வழங்கிய அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் மத்திய தர வர்க்கத்தினர் தான் அதிகளவில் தங்கம் வாங்குகின்றனர். அதுவும், தங்கத்தை கட்டியாகவோ, ஆபரணமாகவோ தான் வாங்க விரும்புகின்றனர். உயர் வருவாய் கொண்ட பிரிவினர் மட்டுமே, தங்கத்தை டிஜிட்டல் அல்லது காகித வடிவில் வாங்க விரும்புகின்றனர். ஆனால், மக்களின் பொதுவான மனநிலை, தங்கம் என்பது பணக்காரர்களுக்கானது என்றே இருக்கிறது. யதார்த்தத்தில், மத்திய தர வர்க்கத்தினரே அதிக அளவு தங்கம் வாங்குகின்றனர்.
ஆயுள் காப்பீடு
ஆண்டு வருமானம் 2 – 10 லட்சம் ரூபாய் உள்ள குடும்பங்களில், அதிக அளவு தங்கம் வாங்கப்படுகிறது. இது நுகர்வில், சராசரியாக 56 சதவீதம் ஆகும். இதற்கு காரணம், தங்கம் என்பது மிகவும் பாதுகாப்பான முதலீடு என கருதுவது தான். வங்கி டெபாசிட், சேம நல நிதி, ஆயுள் காப்பீடு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் தங்கம் ஆகியவையே மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதுவே, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கொண்ட பிரிவினர், அவர்களுடைய முதலீடுகள், அதிக லாபம் தர வேண்டும் என கருதுகின்றனர்.
பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை விட, தங்களுடைய முதலீட்டிருந்து உபரி வருவாய் வர வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக, அவர்கள் பங்குச் சந்தை, பத்திரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர். தங்க நுகர்வை பொறுத்தவரை, அது உயர் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றால் பாதிக்கப்படவில்லை.
74 சதவீதம் பேர்
கடந்த ஐந்து ஆண்டுகளில், உயர் வருவாய் கொண்ட பிரிவினரில், 74 சதவீதம் பேர் தங்கம் வாங்கியிருப்பதை உறுதிபடுத்தி உள்ளனர்.தங்கம் என்பது கொண்டாட்டத்தின் அடையாளமாக இருக்கிறது. ஆபரணங்கள் வாங்குவதை பொறுத்தவரை, 65 – 70 சதவீதம் திருமணம், பண்டிகைகள் ஆகியவற்றை முன்னிட்டு வாங்கப்படுகிறது. 30 – 35 சதவீதமே விருப்பத்தின் பேரில் வாங்கப்படுவதாக இருக்கிறது.
இந்திய குடும்பங்களை பொறுத்தவரை, 43 சதவீத குடும்பத்தினர், தங்கத்தை திருமணத்துக்காக வாங்குகின்றனர். 31 சதவீதம் பேர் குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த சந்தர்ப்பமும் இல்லாமலேயே வாங்குகின்றனர்.கொரோனா காலம், பிற முதலீடுகளை விட தங்கம் ஒரு சிறந்த சொத்து என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைந்துவிட்டது என்பதும் உண்மையே. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பொதுவான மனநிலை, தங்கம் என்பது பணக்காரர்களுக்கானது என்றே இருக்கிறது. யதார்த்தத்தில், மத்திய தர வர்க்கத்தினரே அதிக அளவு தங்கம் வாங்குகின்றனர்.