விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ம.தி.மு.க. கட்சியின் தலைமை நிலைய பொதுச்செயலாளர் துரை வையாபுரி தலைமைத்தாங்கி தொடங்கி வைத்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ம.தி.மு.க-வின் அமைப்பு நிர்வாகத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மாவட்ட நிர்வாகிகள் குழுக்கூட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறோம். இதுவரை 6 மாவட்டங்களில் மாவட்டக்குழு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு 7-வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி புதிய கிளைகளை திறப்பது, நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகள், குளறுபடிகள் ஆகியவற்றை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம். தமிழகத்தில் இந்தித்திணிப்பை பா.ஜ.க எதிர்க்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது வேடிக்கையாகத் தெரிகிறது. 1938 முதல் தமிழகத்தில் இந்தித்திணிப்பை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழகத்தின் கல்விக்கொள்கை. இதை மும்மொழிக் கொள்கையாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் உள்ளது. ஆனால் மத்திய அரசு இந்தியை இணைப்பு மொழியாக்க முயல்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் என கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என கூறுகிறார். அந்தக் கட்சிக்குள்ளேயே தலைமைக்கும், இவருக்கும் முரண் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மக்கள் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்களோ, சகோதரர்களோ அவர்களின் பொறுப்பை முன்னெடுத்துச் செய்வதை ம.தி.மு.க ஒருபோதும் ஆதரிக்காது. இது முற்றிலும் தவறானது. இதுகுறித்து நீண்ட நெடும் விளக்கத்தை தி.மு.க-வைச் சேர்ந்த உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கூறியுள்ளனர். தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலில் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் கட்சியாக ம.தி.மு.க இருக்கும். பாலியல் சம்பந்தமான பிரச்னைகளுக்குத் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்தக்கால ஆட்சியைப்போல இழுத்தடிப்பு செய்யவில்லை. குற்றங்களை கண்டுபிடித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையாக உள்ளார்.
மத்திய அரசு ‘நீட்’ தேர்வில் எந்த ஒரு முடிவையும் சொல்லாத நிலையில் தற்போது ‘க்யூட்’ என்ற நுழைவுத் தேர்வையும் கொண்டுவந்துள்ளது. இதனால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நுழைவுத் தேர்வு நடவடிக்கைகளை ம.தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. பட்டாசு தொழிலில் உள்ள தடைகளை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் அதில் நல்ல தீர்ப்பு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது 150 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசுதான் காரணம். ஏனெனில் மத்திய அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய், சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே தர முடியும் என நிபந்தனை விதித்ததன்பேரில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு இந்தியா நிதி உதவியை செய்துவருகிறது. ஆனாலும் அதே வேளையில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படும் கதைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது. எனவே இந்த சமயத்தை பயன்படுத்தி மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ள நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது. ம.தி.மு.க-வை பொறுத்தவரை இது காலம் கடந்த நீதியாகும்” என்றார்.