தமிழகத்தில் பயின்றது போல் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து சுமார் 300-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
ரயில்வே துறை, அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை வழங்கியது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து வடமாநிலத்தவர்கள் பணிக்கு சேர்ந்திருக்கின்றனர்.
பொதுவாகவே மத்திய, மாநில அரசுப் பணியில் சேரும் நபர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதற்கு அந்தந்த மாநில தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு சரிபார்ப்புக்காக சான்றிதழை அனுப்பி வைக்கும் போது தான், அவை போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்வுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பயின்றது போல் போலி சான்றிதழ் கொடுத்து கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.