சென்னை: நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவில் கடந்த ஆண்டு பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்படஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்புஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுஜூலை 17-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.6-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாணவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவில் பிளஸ் 1 மதிப்பெண் விவரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் (2020-21) பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாண வர்கள் அனைவரும் தேரச்சி செய்யப்பட்டனர்.
மதிப்பெண் இல்லாத சான்றிதழ்
அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழிலும் பாடவாரியாக மதிப்பெண்களை குறிப்பிடாமல், தேர்ச்சி என்று மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பிளஸ் 1வகுப்பில் எடுத்த மதிப்பெண் விவரம் கேட்கப்படுகிறது. அதை பதிவு செய்தால் மட்டுமே விண்ணப்பப் பதிவை நிறைவுசெய்ய முடியும். இதன் காரணமாக தமிழக மாணவர்கள் செய்வதறியாது தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 6-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.