தூத்துக்குடி / நாகர்கோவில்: தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் (ஏப்.15) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி நகரம் வரையான கிழக்கு கடற்கரைப் பகுதியில், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதன்படி வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. திருவள்ளூர், சென்னை, கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி நகரம் வரையான பகுதியில் மீன்பிடி தடை அமலுக்கு வருகிறது.
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடற்கரை பகுதிக்கும் இந்த மீன்பிடி தடைக்காலம் பொருந்தும். அதேவேளை, நாட்டுப்படகுகள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குள் சாதாரண வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடையில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 543 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்துக்கும் வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுமார் 250 விசைப்படகுகள் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.
தற்போது, மீன்பிடித் தடைக்காலமும் அமலுக்கு வருவதால், மேலும் 2 மாதங்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ‘மீன்பிடித் தடைக்காலம் முடிவதற்குள் ஆழப்படுத்தும் பணிகளை முடிக்க வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் தொடங்கி, கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வரைதான் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இயங்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும். மீதமுள்ள பகுதிகள் மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவை. அப்பகுதிக்கு இத்தடை பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.
‘இத்தடையை மீறி, மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசைப்படகின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மானிய டீசலும் நிறுத்தப்படும்’ என தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
4 நாட்களுக்கு மழை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியிருப்பதாவது: தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.13) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் 15, 16 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.