சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்களுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பினை தரும் பொருட்டு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒன்பது மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்தமாதம் 10-ந் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவைக் கட்டணம் உட்பட 375 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்டணம் மக்களுக்கு ஒரு கூடுதல் சுமை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலைஏற்படும். 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
மேலும், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 186 கோடி தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 10.39 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இந்தத் திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தத் தடுப்பூசித் திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவது தான்.
எனவே, முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் மாநிலஅரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினைநடை முறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… தென் மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்