“திமுக-வுக்கு ஜால்ரா மட்டுமல்ல, மிருதங்கம்கூட அடிப்பேன்!" – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற நாள். காந்தி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து இந்த போராட்டத்தை தொடங்க, மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி உப்பு சத்தியாகிரகப் பேரணி ஒன்று புறப்பட்டது. இந்த நினைவு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியினர் திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி, ‘உப்புச் சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை’ நிகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புச் சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை

அந்த வகையில் இந்த ஆண்டும் காங்கிரஸார் அந்த பேரணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “அன்றைக்கு வெள்ளையனை துரத்த வேண்டும் என்பதற்காக நாம் இப்படியான போராட்டங்களைச் செய்தோம். இன்றைக்கு வெள்ளையனை விட கொடியவனான மோடியையும், அமித் ஷாவையும் எதிர்க்கும் விதமாக இந்தப் போராட்டத்தைச் செய்கிறோம். எப்படி மீதியான கத்திரிக்காயையும், வெண்டைக்காயையும் தூக்கி எறிகிறோமோ, அதேபோல அவர்களை (மோடி, அமித் ஷா) தூக்கியெறிய வேண்டும். வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் நாகரிமானவர்கள். ஆகவே நாம் சாத்வீக முறையில் போராடினோம். ஆனால், இந்த இரண்டு பேரும் அநாகரிகத்தின் உச்சம் மட்டுமல்ல, வன்முறையின் உச்சம். ஆகவே, சாத்வீக முறையில் போராடுகிற காங்கிரஸ்காரர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என யாரும் தயவுசெய்து நினைத்துவிடக் கூடாது. ஆயுதம் ஏந்தமாட்டோம், ஏந்தக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால், சூழ்நிலை அதற்கேற்ப வந்தால்!… 75 வருடங்களுக்கு முன்பு நாம் போராடி வாங்கிய சுதந்திரம் இன்றைக்கு சர்வாதிகாரிகளின் கையில் பிடிபட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த சுதந்திரத்தை திரும்ப வாங்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு, முதல் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த காங்கிரஸிற்கு இருக்கிறது. ஆகவே, எந்த சாட்டை கொண்டு விரட்டினால் இந்த மாடுகள் ஓடுமோ, அந்த சாட்டைகளைக் கொண்டு தான் நாம் இந்த மாடுகளை விரட்ட வேண்டும். மாடு என்று சொன்னால் பிரதம மந்திரியை மாடு என்று சொல்கிறாரே என்று நினைத்துவிடாதீர்கள். அவர்களுக்கு மாடும், மாட்டுச் சாணமும், மாட்டு மூத்திரமும் தான் தெய்வம். ஆகவே, நான் நல்லபடியாகத் தான் சொல்கின்றேனே ஒழிய, மாடு என்பதற்குப் பதிலாக எத்தனையோ நாலு கால் பிராணிகள் இருக்கின்றன. குரைப்பது சில, உர்றென்னு சொல்லக்கூடிய சில, அதைப்பற்றி நான் சொல்லவில்லை. அவர்கள் தெய்வமாக நினைக்கின்றார்களே அதைப்பற்றி தான் நான் சொல்கின்றேன்” என ஓபனிங்கிலேயே விளாச ஆரம்பித்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தொடர்ந்து பேசியவர், “என்ன ஒரு கஷ்டமென்றால் இன்றைக்கு மோடியையும், அமித் ஷாவையும் எதிர்க்க வேண்டிய அளவிற்கு நாம் (காங்கிரஸ்) எதிர்க்கின்றோமா என்றால், எனக்கு அதற்கு விடை தெரியவில்லை. எதிர்க்கின்றோம் என்றும் தைரியமாகச் சொல்ல முடியவில்லை. இதே மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து இருந்தார்களேயானால் கேரளா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் தனி நாடாகும். நம்மீதும், நம்முடைய மொழி, உணவு, உடை, கலாச்சாரம் மீதும் கை வைக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ‘நீ இந்தியன் இல்லை’ என்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது அப்படிப்பட்ட இந்தியா எனக்கு தேவையில்லை என்று சொல்லத் தானே தோன்றும். எவ்வளவு பெரிய கஷ்டப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தினர் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தார்கள். அந்த தியாகத்திற்கு மதிப்பில்லாமல் இந்த நாடு சுக்குநூறாக உடைந்து போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால், அதை எப்பாடு பட்டாவது நாம் தடுக்க வேண்டும். ஆயுதம் எடுக்க வேண்டும் எனச் சொன்னாலும் எடுத்துத் தான் ஆக வேண்டும்” என்றார்.

‘என்ன இளங்கோவன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஜால்ரா போடுகின்றானே!’என நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஜால்ரா மட்டுமல்ல, மிருதங்கம் கூட அடிப்பேன்.

இறுதியாய்ப் பேசியவர், “ஸ்டாலின் மீது எனக்கு நாளுக்கு நாள் மரியாதை அதிகரித்து வருகிறது. காரணம், நாம் செய்கின்றோமோ இல்லையோ மத்திய அரசாங்கத்தை வீரத்தோடு எதிர்க்கின்ற ஒரு தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். நம்முடைய தமிழக உரிமைகளை காப்பாற்றுவதற்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல், குரல் கொடுத்துவருவதோடு நடவடிக்கையும் எடுத்து வருகின்ற ஸ்டாலின் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அவருடைய கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். ‘என்ன இளங்கோவன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஜால்ரா போடுகின்றானே!’ என நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஜால்ரா மட்டுமல்ல, மிருதங்கம் கூட அடிப்பேன். யாராவது தமிழ் மக்களைக் காப்பாற்ற நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்னால்… நான் உளப்பூர்வமாகச் சொல்கின்றேன். எவ்வளவு பெரிய கஷ்டப்பட்டு இந்த நாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களும், தியாகிகளும் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அது அத்தனைக்கும் கேடு வருகிறது என்று சொன்னால் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன?” என முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.