திருப்பதி: கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம், ரூ.300 தரிசனம், ஆர்ஜித சேவை தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் போன்றவை வழக்கம்போல் அனுமதிக்கப்படுகிறது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜர் சத்திரம், ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய 3 இடங்களிலும் தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
இதனால், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த 3 மையங்களில் குவிய தொடங்கினர். கூட்ட நெரிசல் அதிகரித்தால், கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. ஆனால், மீண்டும் 12-ம் தேதி விநியோகம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த 3 நாட்களும் சர்வ தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் திருப்பதியிலேயே தங்கிவிட்டனர். நேற்று காலை சர்வ தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர். பெண்கள், குழந்தைகள் என பலர் கூட்டத்தில் சிக்கி தவித்தனர். இதில் சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதனால் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. டோக்கன்கள் இல்லாமலேயே பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை 17-ம் தேதி வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கமாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.