சென்னை:
வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.
தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
16, 17-ந் தேதிகளில் தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் தாராபுரம் 15 செ.மீ. ஆய்க்குடி 12, சங்கரன்கோவில் 11, தென்காசி 10, சிவகிரி 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்றும், நாளையும் தென் தமிழக, கேரளா கடலோரப் பகுதிகள் குமரிக்கடல், லட்சத்தீவு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.