ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இவர் அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அந்த மதுக்கடைக்கு 21 வயதான வாலிபர் ஒருவர் அடிக்கடி மதுகுடிக்க வருவார். அப்போது ஆட்டோ டிரைவருக்கும், அந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 1-ந்தேதி ஆட்டோ டிரைவரும், வாலிபரும் மதுக்கடையில் மதுக்குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறியது. திடீரென்று இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் அந்த வாலிபரை அருகில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து வாலிபருக்கு ஆட்டோ டிரைவர் தாலி கட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
சில நாட்கள் கழித்து ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு அந்த வாலிபர் வந்தார். ஆட்டோ டிரைவரின் பெற்றோரை சந்தித்து தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது குறித்து கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் அவரை அங்கிருந்து துரத்தினார்கள். இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அந்த வாலிபர் தனக்கு ஆட்டோ டிரைவருடன் திருமணம் ஆனதை அறிந்த எனது பெற்றோர் என்னை வீட்டில் இருந்து துரத்திவிட்டனர். எனவே ஆட்டோ டிரைவர் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆட்டோ டிரைவர் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறினார். இதை பெற்றுக்கொள்ள வாலிபர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபர் ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு கொடுத்தார். அதனுடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதையும் படியுங்கள்…அம்பேத்கர் பிறந்த நாளில் சமூக நீதியை நிலைநாட்ட சபதம் ஏற்போம்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்