மங்களூரு:
தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை உடுப்பியில் இருந்து மங்களூரு வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பி.வி.எஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில டி.ஜி.பி. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்த சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனவே இனி சட்டம்-ஒழுங்கு விதிமுறை மீறல் நடைபெறாது. மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குமாரசாமியின் ஜல யாத்திரை, காங்கிரசின் பாதயாத்திரை போன்றது. தேர்தல் வருவதால் இவர்கள் இந்த யாத்திரைகளை கையில் எடுத்துள்ளனர். இவ்வளவு நாட்கள் இவர்கள் எங்கு சென்றனர் என்பதே தெரியவில்லை. அவர்கள் மக்களின் கவனத்தையும் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் தெளிவாக உள்ளனர்.
இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்பது இல்லை. காண்டிராக்டர் மரணம் குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. நிருபர்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதுவரை எனக்கு எந்த புகார் மனுவும் வரவில்லை. யாரேனும் புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் இதுவரை எந்த தர்ம யுத்தமும் நடைபெறவில்லை. சிலர் அவ்வாறு நடைபெறுவதாக கூறி பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் அமைதியான முறையில்தான் வாழ்ந்து வருகிறார்கள். யாருடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவது மாநில அரசின் கடமை. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.