உக்ரைனில் ரஷ்ய துருப்புகளிடம் சரணடைந்த பிரித்தானிய வீரரை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் விளாடிமிர் புடினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்தவர் 28 வயதான ஐடன் அஸ்லின் என்ற பிரித்தானிய வீரர்.
கடந்த 2018ல் உக்ரேனிய பெண் ஒருவரை காதலித்த நிலையில், அவருடன் வாழ உக்ரைன் சென்ற ஐடன் அஸ்லின், தற்போது ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக துறைமுக நகரமான மரியுபோலில் போரிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், உணவு மற்றும் வெடிமருந்துகள் கைவசம் இல்லாமல் போகவே, ரஷ்ய துருப்புகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்கும் சில மணி நேரம் முன்னர், ஐடன் அஸ்லின் பிரித்தானியாவில் உள்ள தமது குடும்பத்தாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், தாம் உட்பட சிறு குழுவினருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை குறித்து பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஐடன் அஸ்லினின் சகோதரர் நாதன் வூட் தெரிவிக்கையில், தமது சகோதரர் தொடர்பில் ரஷ்யாவிடம் கெஞ்சுவதை தவிர வேறு வழி தெரியவில்லை எனவும், அவரை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐடன் அஸ்லின் பிரித்தானியாவின் கூலிப்படை என வெளியாகும் தகவல் பொய் எனவும், அவர் பிரித்தானிய- உக்ரேனிய குடிமகன் எனவும், உக்ரைன் இராணுவத்தில் பதிவு செய்து கொண்டே போருக்கு களமிறங்கியுள்ளார் எனவும் நாதன் வூட் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கில் 10 மாத காலம் ஐடன் அஸ்லின் போராடியுள்ளார். 2016ல் அவர் நாடு திரும்பிய நிலையில் பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 30 மணி நேரம் தீவிர விசாரணிக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
தற்போது மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளிடம் சரணமடைந்துள்ளார்.
அவர் மிக விரைவில் விடுவிக்கப்படுவார் என்றே நம்புவதாக பிரித்தானியாவில் உள்ள குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.