சென்னை:
தமிழக சட்டசபை
யில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக பல மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் நனைந்து வீணாகும் நிலையில் இருக்கிறது.
எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க தார் பாய் கொண்டு மூடி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நெல் அதிகமாக விவசாயம் செய்யும் இடங்களில் தானியக்கிடங்குகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக விளக்கம் அளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசிதாவது:-
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் 51 சேமிப்பு கிடங்குகளிலும், 166 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு ஆன்லைன் மூலம் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறுத்தி இருந்தாலும், விவசாயிகளிடம் இதுகுறித்து உரிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.