திருப்பதி:திருமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, பக்தர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.திருமலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், பக்தர்கள் வருகை அதிகரித்து, நான்கு நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தை ரத்து செய்துள்ளது.பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது. திருப்பதியில் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் தருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுஉள்ளது.
தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதால், தரிசன வரிசையில் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றனர். அதனால் ஏற்பட்ட நெரிசலில் நேற்று பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement