600 ஆண்டுகள் பழைமையான ரூ. 12 கோடி மதிப்புள்ள 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி சப்ரெய்ன் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் புதுச்சேரி சப்ரெய்ன் தெருவில் உள்ள இடத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தொன்மை வாய்ந்த நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளுக்குண்டான ஆவணங்கள் உரிமையாளர் ஜேசாப் கொலம்பானியிடம் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து 1980க்கு முன்பாக திருடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும் என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட சிலைகள் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சோழர்கள் மற்றும் விஜய நகர பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக்காலத்தை சேர்ந்தவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சிலைகளை பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த ஒருமுறை முயற்சி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஜோசப் கொலம்பானியிடம் கிடைத்தது எப்படி? எந்த கோவிலை சேர்ந்தது? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM