'பீஸ்ட்' விஜய், அடுத்த பட வாய்ப்பு, அன்பு சூழ் குடும்பம்! நியூஸ் ரீடர் சுஜாதா பாபு ஷேரிங்ஸ்

ஃபாத்திமா பாபு, அனிதா சம்பத் உள்பட எத்தனையோ செய்தி வாசிப்பாளர்கள் நடிப்பில் களமிறங்கிப் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் சுஜாதா பாபு. சன் டி.வியின் செய்திவாசிப்பாளரான இவர், நெல்சன் இயக்கத்தில், விஜய்யின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பட வாய்ப்பு கிடைத்தது பற்றி, விஜய்யுடன் நடித்தது, நியூஸ் ரீடிங், குடும்பம் என பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

சுஜாதா பாபு

”பீஸ்ட்’ படத்துக்கு முன்னாடியே சில படங்கள்ல நடிச்சிருந்தாலும், விஜய் மாதிரி பெரிய நடிகருடன் சேர்ந்து நடிச்ச பீஸ்ட் படம் என் நடிப்பு கரியர்ல ரொம்பவே ஸ்பெஷல். இந்தப் படத்துல எனக்கு வாய்ப்பு கிடைச்சது நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம். கொரோனா எல்லார் வாழ்க்கையையும் முடக்கிப் போட்டிருந்த நேரத்துல ஒருநாள் நைட் எனக்கு சன் பிக்சர்ஸ்லேருந்து போன் வந்தது. ”நீங்க ‘பீஸ்ட்’ படத்துக்காக செலக்ட் ஆயிருக்கடீங்க.. அடுத்து படக்குழுவினர் உங்ககிட்ட பேசுவாங்க’ன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. அவங்க சொன்ன மாதிரியே படக்குழுவினர் பேசினாங்க.

அடுத்தடுத்த நாள் ஷூட்டிங் கிளம்பிட்டேன். ஷூட்டிங் போனபிறகு தான்,வேற யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சது. ஆரம்பத்துல ரொம்பவே பதற்றமா இருந்தது. ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ், கேமராமேன்னு எல்லாரும் ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க. நம்மால ஏதும் சொதப்பிடக்கூடாதுனு பயந்தேன். ஆனா பயந்த மாதிரி இல்லாம, ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா கலகலப்பா இருந்தது. டைரக்டர் நெல்சன் சார் செம ஜாலியா, பொறுமையா எல்லாத்தையும் அணுகுவார். ஏதாவது தப்பா பண்ணினாகூட பொறுமையா பக்கத்துல வந்து, இது இப்படி இல்ல, கொஞ்சம் மாத்தி பண்ணுங்கன்னு சொல்லுவார்.

சுஜாதா பாபு

இந்த படத்துல விஜய் சாரோடு நடிச்ச, பழகிய அந்த நாள்கள் ரொம்பவே மகிழ்ச்சியானவை. விஜய் ரொம்பவே அமைதியான, மென்மையான, எளிமையான மனிதர். ஃப்ரீ டைம்ல நம்ம கருத்துகளைக் கேட்டுக்கிட்டு அதுக்கு பதில் சொல்வார். விஜய் சார், நான், அபர்ணா தாஸ் மூணுபேர் மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த நாள்கள் இருக்கு. அப்பவும் அவர் அதிகம் பேசினதில்லை. நாம ஏதாவது கேட்டா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்வார்.

அவ்வளவு பெரிய ஸ்டார்கூட நடிச்ச பிரமிப்பு எனக்கு இன்னும் நீங்கலை. என் கணவர்கூட சேர்ந்து நான் படம் பார்த்தேன். ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருந்தது. கொஞ்சம் பயமாவும் இருந்தது. ஆரம்பத்துலயே இப்படியொரு படத்துல நடிச்சதால அடுத்தடுத்த படங்களைத் தேர்ந்தெடுக்கிறது இன்னும் கவனமா இருக்கணும்ங்கிற பயம் இருக்கு…” ‘பீஸ்ட்’ அனுபவங்களை முடித்தவர், பர்னசல் பக்கங்களையும் பகிர்ந்தார்.

‘பீஸ்ட்’ டீம்

”வேலைக்குப் போகணும்னு நினைச்சிட்டிருந்தபோது எதேச்சையா நியூஸ் ரீடர் ஆயிட்டேன். போகப் போக ரொம்ப பிடிச்சுப்போச்சு. இருக்குற துறையில என் இருப்பை பதிவு செய்ய நினைச்சு கடினமா உழைச்சேன். மக்கள் என்னை அடையாளம் கண்டு பேசறபோதெல்லாம் சந்தோஷமா இருக்கும். அப்பா, அம்மா, கணவர், மாமனார், மாமியார்னு அன்புசூழ் உறவுகளோடு வாழுற குடும்ப பெண் நான். என் கணவர் அரசு அதிகாரியா இருக்கார், என் மகன் எம்பிஏ படிச்சிட்டிருக்கான்.

ஓய்வு நேரங்கள்ல சைக்கிளிங் பண்றது, தோட்டத்துல நேரம் செலவிடுறது, வீட்டு வேலைகள்ல மகிழ்ச்சியா ஈடுபடுறதுனு ரொம்பவே அமைதியான வாழ்க்கை என்னோடது. செய்தி வாசிப்பாளரா இருந்தபோதும் சரி, திரைப்படங்களின் ஷூட்டிங் நேரத்திலும் சரி குடுமப்த்தினரின் ஒத்துழைப்புங்கிறது ரொம்பவே அதிகமா இருக்கு. கணவர் மற்றும், மகன் ரெண்டு பேருமே ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிறது, சமையல் செய்து வைக்கிறதுனு ரொம்பவே ஒத்துழைப்பாங்க. என்னை டென்ஷனே ஆக்க மாட்டாங்க. அன்பு சூழ் உலகத்துல வாழறது கடவுள் எனக்குக் கொடுத்த வரம்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.