தீவிரவாதிகள் தங்களின் தலைவரை விடுதலை செய்வதற்காக, ஒரு Mall-ஐ ஹைஜாக் செய்கிறார்கள். ஆனால், அந்த மாலுக்குள் மிகப்பெரிய ராணுவ அதிகாரி ஒருவர் இருந்தால் அடுத்த என்ன நடக்கும், என்பதுதான் பீஸ்ட் படத்தின் ஒன்லைன். இதுதான் டிரெய்லரிலேயே தெரிந்ததே என்கிறீர்களா? தெரிந்தாலும் இதுதான் ஒன்லைன்.
தன் கையை மீறி ஏற்படும் ஒரு விபத்தினால், தான் உளவு பார்க்கும் ராணுவ வேலையை விடுத்து விலகியிருக்கிறார் வீர ராகவன். ஆனாலும், விதி அவரை காதல் ரூபத்தில் மீண்டுமொரு சிக்கலில் சிக்க வைக்கிறது. தான் வேலை பார்க்கும் புதிய கம்பெனி பிரச்னை தொடர்பாக, ஒரு மாலுக்கு தன் குழுவுடன் செல்கிறார் வீர ராகவன். பெரிய தலைக்கட்டு ஒருவரை விடுவிக்க, சென்னையில் இருக்கக்கூடிய அந்த மாலை ஹைஜாக் செய்கின்றனர் தீவிரவாதிகள். அரசாங்கம் ஒருபக்கம் தீவிரவாதிகளுடன் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அந்த மாலுக்குள் இருக்கும் வீர ராகவன் தீவிரவாதிகளைப் பந்தாட தொடங்குகிறார். மும்முனை போராக எல்லாம் மாற, யார் யாரைக் கொல்கிறார்கள் யார் மீதம் இருக்கிறார்கள் என்பதுதான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை.
வீரராகவனாக விஜய். விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைக் காட்சிகள் இதில் உண்டு. ஆனால், அவை பார்க்க அவ்வளவு ஸ்டைலிஷாக இருக்கின்றன. ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர் வில்லாய் வளைகிறார். பாடல் காட்சிகளில் விஜய் டான்ஸ், காஸ்டியூம் இரண்டும் பக்கா. காமெடி பட்டாளத்தில் சுனிலும், சிவா அரவிந்தும் ‘டாக்டர்’ படத்தின் மாகாளி, கிளி கதாபாத்திரங்களின் நீட்சியாகவே இதிலும் வருகிறார்கள். பூஜா ஹெக்டே விஜய்யைச் சந்திக்கும் முதல் காட்சியிலும், சதீஷிடம் பேசி மாட்டிவிடும் காட்சியிலும் ஈர்க்கிறார். ரெடின் கிங்ஸிலிக்கும், யோகி பாபுவுக்கும் காமெடி காட்சிகள் இருந்தாலும் அவை பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. இந்தப் படத்தில் காமெடிக்கான புதுவரவு விடிவி கணேஷும், டான்ஸ் மாஸ்டர் சதீஷும். இருவருமே சிறப்பாக அவர்களின் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்கள். விடிவி கணேஷின் நிறைய மேனரிசங்கள் சிரிக்க வைக்கின்றன. செல்வராகவன் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி’ ரவிகிருஷ்ணாதான் தெரிகிறார். அல்லது, செல்வராகவன் தான் ‘7ஜி’ ரவிகிருஷ்ணா என்பதால் இப்படி நடிக்கிறாரா என தெரியவில்லை. மற்றபடி இந்தப் பாத்திரத்துக்கு அவரின் ஏற்ற இறக்க வசனங்கள் பொருந்திப் போகின்றன. மத்திய அமைச்சராக வரும் ஷாஜி ஏன் இப்படி நடிக்கிறார் என்றே தெரியவில்லை. ‘ஏம்பா இவன் டிராமா பண்றான்பா’ என நக்கலடிப்பது செல்வா கதாபாத்திரம் மட்டுமல்ல நாமும்தான். மலையாள சினிமாக்களில் நல்ல நடிகர்களாய் இருப்பவர்களைத் தமிழுக்கு இறக்குமதி செய்து உப்புமா கதாபாத்திரங்களை வழங்கி கௌரவிக்கும் வழக்கம் பல காலமாய் இருக்கிறது. அந்தப் பட்டியலில் புதிய வரவு டாம் ஷைன் சாக்கோ.
படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்டன்ட் காட்சிகளும், பின்னணி இசையும்தான். கோடாளி, கத்தி, துப்பாக்கி என ஒவ்வொரு ஆயுதமும் பட்டாசாய் பறக்கிறது. அனிருத்தின் பின்னணி இசையில் நிஜமாகவே ஸ்பீக்கர்கள் தீப்பிடிக்கின்றன. துப்பாக்கி, கத்தி சண்டைக் காட்சிகளில் ஒலி வடிவமைப்பு குழுவின் உழைப்பும் அபாரம். அழகிய கூத்தன், சுரேன் இருவரின் ஒலி வடிவமைப்பு அருமை. ஸ்லோ மோஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் பூந்து விளையாடியிருக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் கேமரா. “ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு இந்தில டிரான்ஸ்லேட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. வேணும்னா நீயே தமிழ் கத்துக்க” எனச் சில வசனங்களில் மட்டும் நெல்சன் டச்.
படத்தின் மிகப்பெரிய பிரச்னை இரண்டாம் பாதிதான். க்ரைம் கதையில் காமெடி என்பதுதான் நெல்சனின் பலம். ஆனால், இந்தப் படத்தில் அது பெரிதாக க்ளிக் ஆகவில்லை. விஜயகாந்த், அர்ஜுன் பாணியிலான தேசப்பற்று சினிமாவில் காமெடியைக் கலக்க நினைத்திருக்கிறார் நெல்சன். ஆனால், அதில் காமெடியும் இல்லாமல், சீரியஸ் விஷயங்களும் இல்லாமல் செல்கிறது. லாஜிக் அபத்தங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தாலும், சுவாரஸ்யம் என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் செல்லும் இரண்டாம் பாதி, நம்மை ஒரு கட்டத்துக்கு மேல் சோதிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் காட்சிகளில் இருக்கும் ஒரே ஆபத்பாந்தவன் விடிவி கணேஷ் மட்டும்தான். அதிலும் படம் முடிந்துவிட்டதென நினைக்கும் தறுவாயில், ஃபைட்டர் ஜெட் எல்லாம் எடுத்துக்கொண்டு இன்னுமொரு சினிமாவையே எடுத்திருக்கிறார் நெல்சன். விஜய்யின் முந்தைய படங்களைப் போலவே, இதிலும் விஜய் ஏற்கெனவே பேசிய வசனங்கள்தான் படத்தின் இன்டர்வெல் பிளாக். புதிய வசனங்களுக்கும் அப்படி என்ன வார்த்தைப் பஞ்சம் தமிழ் சினிமாவில் வந்துவிட்டதென தெரியவில்லை. தீவிரவாதக் காட்சிகள் என்றாலே பாகிஸ்தான் விழுந்தடித்துக்கொண்டு இந்திய எல்லையில் நிற்கும் என்கிற அரதப் பழைய பல்லவியை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்திய சினிமாக்களில் படைப்பாளிகள் எழுதிக்கொண்டு இருப்பார்கள் எனத் தெரியவில்லை.
இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன், காமெடியும் க்ளிக் ஆகியிருந்தால், உண்மையாகவே பீஸ்டாக இருந்திருக்கும்.