புதுடெல்லி: தெலங்கானாவில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை மத்திய அரசு நிராகரித்தது. இதைக் கண்டித்து டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் நேற்று முன்தினம் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மத்திய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசிடம் புழுங்கல் அரிசி அதிகமாக கையிருப்பில் உள்ளது. இதனால் 2021-22 காரிப் சந்தைப் பருவம் முதல் மத்திய அரசின் தொகுப்புக்கு புழங்கல் அரிசியை வாங்குவதில்லை என கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. எனினும் மாநில அரசுகள் தங்களின் தேவைக்காக வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனை தெலங்கானா அரசு ஏற்றுக்கொண்டு, இனி புழுங்கல் அரசியை மத்திய தொகுப்புக்கு வழங்க மாட்டோம் என கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
புழுங்கல் அரிசிக்கான தேவை குறைவாக உள்ளது. தற்போது மத்திய அரசிடம் 40 லட்சம் மெட்ரிக் டன் புழுங்கல் அரசு கையிருப்பில் உள்ளது. எனவே, தேவைக்கு அதிகமாக புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்தால் மக்களின் பணம் வீணாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.