உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு மாண்புமிகு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இவ்வியக்கம் சார்பில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தை உடுப்பி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 12) தொடங்கி வைத்தார்.
மண் வளமாக உயிருடன் இருந்தால் தான் மக்களும் உயிருடன் இருக்க முடியும். மண்ணுக்கும் மனிதர்களுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. நம்முடைய வாழ்வு என்பதே நம் தாயின் கருவறையில் தொடங்கி பூமி தாயின் கருவறையை சென்றடையும் பயணம் தான். ஆகவே, இந்த பயணத்தை மிகவும் இனிமையானதாக அமைத்து கொள்ள மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.” என்றார்.
மணிபால் நகரில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் சுனில் கர்கலா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பட் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.
இதுதவிர, மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மண் வளம் தொடர்பாக சத்குரு பேசியுள்ள வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நம் வாழ்விற்கும், நிலையான எதிர்காலத்திற்கும் மண் மிகவும் முக்கியம். நாம் மண்ணை அழித்தால், மனித குலமும் அழியும். ஆகவே, அனைவரும், குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் என்னுடைய இளம் நண்பர்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அன்பு, நம்பிக்கை, வாழ்வு மற்றும் மனித குலத்திற்காக இந்த விழிப்புணர்வு செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கர்நாடக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய இருவருக்கும் சத்குரு அவர்கள் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
மண் வளம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஸ்லோவினியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணித்து 22-வது நாளில் பெல்ஜியம் செல்ல உள்ளார். பின்னர், மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வர உள்ளார். இவ்வியக்கத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.