ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர், இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் மிக முக்கிய நகரமான மரியுபோல் நகரை ரஷ்யா மிகக் கடுமையாக தாக்கி வருகிறது. போரில் தாக்குதலுக்கு உள்ளான உடல்களை எரிப்பதற்குக் கூட இடமில்லாமல் மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தென்கொரிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோ, “உக்ரைன் கடற்படையின் 36 -வது பிரிவைச் சேர்ந்த 1,026 வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மரியுபோல் நகரில் சரணடைந்து விட்டனர். அதில் காயமடைந்துள்ள வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.