சென்னை: ரூ.20 கோடி செலவில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” தொடங்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நடந்த கால்நடை பராமரிப்புத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, 25 கோடி ரூபாய் செலவில் 37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், 14 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் செட்டிநாடு, கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை , கோழிக்குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை நிறுவுதல், 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் 15 மாவட்டங்களில் 9 உப வடிநிலப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதில் இடம்பெற்ற16 முக்கிய அறிவிப்புகள்:
> தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ரூ.85 கோடியே 53 லட்சம் செலவில் வழங்கப்படும்.
> 37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
> வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் மற்றும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” ரூ.20 கோடி செலவில் தொடங்கப்படும்.
> செட்டிநாடு,கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை, கோழிக்குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை ஆகியவை 14 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
> தொலைதூர கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (7,760) 7 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
> உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 15 மாவட்டங்களில், 9 உப வடிநிலப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புப் பணிகள் ரூ. 4 கோடியே 84 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
> உதகை மாவட்ட கால்நடை பண்ணையில் நோய் இல்லாத உறைவிந்துக் குச்சிகளை உற்பத்தி செய்ய காளைகளுக்கான தனிமைப்படுத்துதல் (Quarantine) நிலையம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும்.
> நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக் கோழி பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
> கால்நடை பராமரிப்புத் துறையின் உறைவிந்து உற்பத்தி நிலையங்களில் (உதகை, ஈச்சங்கோட்டை மற்றும் ஓசூர்) தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு RTPCR இயந்திரங்கள் 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
> 2000 ஏக்கர் பரப்பளவில் கால்நடை தீவனபயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.3,000 மானியமாக வழங்கும் திட்டம் 60 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
> பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகளை வழங்கி விவசாயிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் 42 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
> கரூர் மாவட்டத்தில் புழக்கடை கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
> தமிழகத்தில் உள்ள நாட்டின நாய்களுக்கான (ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் கோம்பை) இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் 1 கோடி ரூபாய் செலவில் தென்காசி மாவட்டத்தில் நிறுவப்படும்.
> கிராமப்புற முன்னேற்றத்திற்கான வெண்பன்றி இனப்பெருக்கம் மற்றும் உள்ளீட்டு மையம் 99 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்திலுள்ள கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்படும்.
> நாட்டுக்குட்டை மாடுகளுக்கான பாதுகாப்பு மையம் ரூ.86 லட்சத்து 26 ஆயிரம் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்திலுள்ள கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்படும்.
> உம்பளாச்சேரி மாடுகளின் இனத்தைப் பல்துறை அணுகுமுறையின் மூலம் அதன் பூர்வீக வாழ்விடங்களில் பாதுகாத்தல் எனும் திட்டம் 78 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்படும்.