ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 46 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவடைந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலுக்கு செல்வதற்காக, திரிகூட மலையிலிருந்து ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. தரையிலிருந்து 44 டிகிரி கோணத்தில், சுமார் 750 மீட்டர் நீளத்தில் 390 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் வகையில் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று மாலை சுமார் 4 மணி அளவில் இங்கு இரண்டு ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 25 கேபின்கள் ஆங்காங்கே அந்தரத்தில் நின்றன.
60 பக்தர்கள் நடுவானில் சிக்கித் தவித்த நிலையில், ராணுவம், விமானப்படை, இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை ஒரு பெண் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நேற்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது, மீதமிருந்த 15 பேரில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஷோபா தேவி என்ற 60 வயது பெண் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
46 மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ரோப் கார் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை கவனமுடன் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா கடிதம் எழுதியுள்ளார். அனைத்து ரோப் கார் திட்டங்களையும் கவனமுடன் ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கிறதா என சோதிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM