13.4.2022
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 49-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 13, 6.00 P.M.
உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இந்த பொருளாதார தடை நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், ரஷியா தனது பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய பல ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் நிதிஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 13, 5.00 P.M.
உக்ரைனில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஷியா, ஜோ பைடனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13, 2.00 P.M.
உக்ரைன் மரியோபோல் நகரில் ரஷியப் படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்போவதாக அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கள்கிழமையன்று, உக்ரைன் அசோவ் பகுதியில் உள்ள படைப்பிரிவு மீது நடந்த தாக்குதலில், மூன்று ராணுவ வீரர்கள் ‘விஷத்தன்மை கொண்ட பொருளால்’ காயமடைந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அது இந்த போரை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. அத்தகைய தாக்குதல்களை ரஷியா மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்நாடுகள் உறுதி அளித்துள்ளன.
ஏப்ரல் 13, 12.05 P.M.
இன்று (புதன்கிழமை) மனிதாபிமான தாழ்வாரங்களை திறக்க முடியாது என்று உக்ரைன் துணைப் பிரதமர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 13, 11.29 P.M.
போலந்து, பால்டிக் நாடுகளின் அதிபர்கள் கீவ்வுக்கு வருகை
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா மற்றும் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியாவின் ஜனாதிபதிகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக கீவ்வை நோக்கிச் சென்றுள்ளனர் என்று போலந்து தலைவரின் ஆலோசகர் தெரிவித்தார்.