விபரீத முடிவு எடுத்த திருமணமான பெண் – கணவர் மீது சந்தேகம் எழுப்பிய உறவினர்கள்!

ஆத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து பெண்ணின் பெற்றோர் வட்டாட்சியரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோவிந்த ராஜ பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும், தலைவாசல் சிறுவாச்சூரைச் சேர்ந்த சசிகலா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஆத்தூர் விநாயகபுரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சசிகலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, கணவர் ஜெயக்குமார், சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தனது சொந்த ஊரான கோவிந்த ராஜபாளையத்தில் சசிகலாவின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததும், சசிகலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
மேலும் சசிகலாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது கணவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என உடலை வாங்க மறுத்தனர். பின்னர் ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதும் ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சசிகலாவின் உறவினர்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தப்பின்னர், அதன் அடிப்படையில் உடலை வாங்க சசிகலாவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.