பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை அரசு, இன்றியமையாப் பொருட்கள் இறக்குமதிக்காக வெளிநாடுவாழ் இலங்கையர்களிடம் நன்கொடை வழங்கும்படி வேண்டியுள்ளது.
இலங்கையில் விடுதலைக்குப் பின் எப்போதும் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், மருந்துககள், உணவுப் பண்டங்கள் ஆகிய இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாததால் அவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மொத்த வெளிநாட்டுக் கடனான 3 இலட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றியமையாப் பொருள் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நன்கொடையாக வழங்கும்படி வெளிநாடு வாழ் இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும், அந்தப் பணம் இன்றியமையாத் தேவைக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புத் தொடர்பாக வெளிநாடுவாழ் மக்கள் பலரும் இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு உதவும் எண்ணம் உள்ளதாகவும், அதேநேரத்தில் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். சுனாமி நிவாரணத்துக்காகப் பெற்ற நன்கொடை உரியவர்களுக்குச் சேராமல் அரசியல்வாதிகளால் சுருட்டப்பட்டதைச் சிலர் நினைவுகூர்ந்துள்ளனர்.