நடிகர் விஜய் புத்தம்புதிய குழுவுடன் கரம் கோர்த்து தயாராகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம், ரசிகர்களின் ஆரவாரங்களுக்கிடையே வெளியாகியுள்ளது. நகைச்சுவையுடன் அதிரடிக் காட்சிகளும் நிறைந்து ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகள் கொண்டாட்டக் களமாகியுள்ளன.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது ‘பீஸ்ட்’ படத்தில் RAW அதிகாரி வீரராகவனாக அதிரடி காட்டியுள்ளார் விஜய். ‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு ‘பீஸ்ட்’டிலும் தீவிரவாதிகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய். ‘மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் ‘டாக்டர்’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் முதல்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே விஜய்க்கு முதல்முறையாக ஜோடியாகியுள்ளார்.
படத்தில் கேமராவுக்குப் பின்னால் இருந்து நடிகர்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல்முறையாக அரிதாரம் பூசியுள்ளார். மலையாளத்தில் மனோகரம், ஞான் பிரகாசன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அபர்ணா தாஸ் முதல்முறையாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படி ஏராளமான முதல்முறை என்ற சிறப்புகளுடன் வெளியாகியுள்ளது ‘பீஸ்ட்’.
நெல்சன் திலீப்குமாரின் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களைப் போல Dark Humor வகை படமாக இல்லாமல், அதிரடியான திரைப்படமாகவே உருவாகியுள்ளது ‘பீஸ்ட்’. துப்பாக்கி திரைப்படத்தில் விடுமுறைக்கு மும்பை வரும் ராணுவ அதிகாரி, தீவிரவாதிகளைக் கண்டறிந்து அழிப்பதாக கதை அமைந்திருக்கும். அதேபோல வீரராகவன் என்ற ரா அதிகாரியான விஜய், ஷாப்பிங் மாலை கடத்திவைத்திருக்கும் தீவிரவாதிகளின் முயற்சியை முறியடிக்கிறார். இதற்காக தோட்டாக்கள் தெறிக்க மாஸ் காட்டியுள்ளார் விஜய்.
‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த அறிவிப்பிலிருந்தே வெளியீட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாடிக் களித்து வருகின்றனர். அதேநேரம் சில இடங்களில் படம் வெளியாகாததால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கரூரில் ‘பீஸ்ட்’ வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். படம் வெளியாகும் இடங்களில் பீஸ்ட்டுக்கு ஏராளமான வரவேற்பும் கிடைத்திருக்கிறது. திருப்பத்தூரில் ‘பீஸ்ட்’ வெளியாகும் திரையரங்கில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட்டை வைத்திருக்கின்றனர்.
“முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக பீஸ்ட் இருக்கும். திரையரங்கில் இரண்டரை மணி நேரமும் கொண்டாடி மகிழலாம்” என படக்குழுவினர் சொல்லியிருந்தது போலவே படமும் அமைந்திருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய செய்தி: அக்டோபரில் ஜெட் ஏர்வேஸ் : தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தகவல்