வேளாண் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தமிழக அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கெயில் நிறுவனம் வேளாண் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்ட போது, அதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதன் விளைவாக, கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் வேளாண் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது என்றும், விளை நிலங்களில் பதியப்பட்ட குழாய்களைகளை அகற்றி, மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கெயில் நிர்வாகம் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அடாவடித்தனமாக எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், கரியப்பனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கணேசன் என்பவருக்கு சொந்தமான 64 சென்ட் நிலத்தில் இன்று குழாய் பதிக்க அதிகாரிகள் வலுகட்டாயமாக முயன்ற போது பொதுமக்களும் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, விவசாயி கணேசன் அருகிலிருந்த தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், அவரின் மரணத்திற்கு கெயில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும், தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் கெயில் நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக விளை நிலங்களில் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான பிரச்சனையில் தமிழக அரசின் நிலையை விவசாயிகளுக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது என்று சண்முகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.