பெங்களூரு: கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் கேட்டு மிரட்டியதால் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அமைசர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அவரை கைது செய்யக் கோரி கவர்னரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. பெலகாவியை சேர்ந்த காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் உடுப்பியில் 12ம்தேதி தற்கொலை செய்தார். கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என வற்புறுத்தியதால் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்த நிலையில் தனது சாவிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என டெத் நோட் எழுதி வைத்திருந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்,. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சி தலைவர் பிகே ஹரிபிரசாத் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பெங்களூருவில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்தனர். அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியை பறிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்த பிறகு நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:‘காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் சாவிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாவே நேரடி காரணமாவார். அமைச்சர் ஈஸ்வரப்பா உத்தரவின் பேரில் சந்தோஷ் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொண்ட நிலையில் அதற்கான பில் தொகை கிடைக்கவில்லை. பில் தொகை கிடைக்கும் என நினைத்து கொண்டு சந்தோஷ் பாட்டீல் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் நகைகளை விற்பனை செய்து சொத்துகளை அடமானம் வைத்து பணிகளை முடித்துள்ளார். பணிகள் முடிந்த நிலையில் பில் தொகை கிடைக்கவில்லை என்பதால் அமைச்சர் ஈஸ்வரப்பாவை அணுகிய போது பில் தொகை விடுவிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்டுள்ளார். அமைச்சர் ஈஸ்வரப்பாவின் இந்த நடவடிக்கையின் காரணமாக வேறு வழி இன்றி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு சந்தோஷ் பாட்டீல் டெத் நோட் எழுதி வைத்துள்ளார். அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான முகாந்திரம் இருக்கும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜ தலைவர்கள் ஈஸ்வரப்பாவின் பதவியை பறிக்கவில்லை. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கை மீது கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறோம். ஒரு வேளை கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி மக்கள் மன்றத்தில் இதை எடுத்துக்கூறி பிரசாரம் மேற்கொள்வோம். இதற்கு முன்பு கணபதி தற்கொலை சம்பவத்தின் போது உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உடனடியாக பதவி விலகினார். சிபிஐ வசம் அந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது தற்கொலை செய்த நபர் அதுவும் பாஜவை சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் தனது சாவிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா நேரடி காரணம் என கூறி டெத் நோட் எழுதியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது 40 சதவீதம் கமிஷன் அரசு என்பதை உறுதி செய்துள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் மீது வழக்குஇந்நிலையில் ஒப்பந்ததாரர் தற்கொலை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்த உடுப்பி டவுன் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டதை தொடர்ந்து மைசூருவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் ஈஸ்வரப்பா அக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு பெங்களூரு திரும்பினார். பின்னர் அவர் முதல்வரை சந்தித்து விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.