உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் பெரிய கோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் – கமலாம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபமான மேலவீதிக்கு வந்தடைந்தனர்.
இதையடுத்து அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 52 அடி உயரமும், 40 டன் எடையும் கொண்ட இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சிறப்புமிக்க இந்த தேரை ஏராளமான பக்தர்கள் ‘சிவ’ ‘சிவ’ ‘ஓம் நமச்சிவாய’ என்ற பக்தி முழக்கத்துடன், வடம்பிடித்து இழுத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM