600 ஆண்டுகால பழமையான 3 சிலைகள் அதிரடியாக மீட்பு – திருப்புமுனையை ஏற்படுத்திய வாக்குமூலம்

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வழக்கில் தொடர்புடையவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் இருந்து 600 ஆண்டுகால பழமையான மூன்று சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரியில் மூன்று சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த சிலைகள் எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டு, அதன் மூலம் மேலும் 80 சிலைகளை புதுச்சேரியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டனர். இந்த சிலைகளை கொடுத்தது யார் என விசாரணை மேற்கொண்டதில், பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சிக்கினார்.
இந்த வழக்கில் சுமார் 18 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மேற்கொண்டதில், அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான சிலைகள் சிக்குவதற்கு மிக முக்கியமாக இந்த வழக்கு அமைந்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, தொடர்புடைய சாட்சி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது தாத்தா காலத்தில், பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அதிகாரியிடம் 1980-களுக்கு முன்பாக சில சிலைகள் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
image
அதனை அடிப்படையாக வைத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ததில், புதுச்சேரி சப்ரெய்ன் பகுதியில் உள்ள தனியார் பிரஞ்சு கலாச்சார மையத்தில் சோதனை மேற்கொண்டபோது, 3 பழமை வாய்ந்த பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த கலாச்சார மையத்தை நடத்தும் பிரெஞ்சு நாட்டு பிரஜையை சேர்ந்தவர்களிடம் விசாரணை செய்ததில், பிரெஞ்சு அதிகாரியின் பேரன் ஜோன்ஸ் பியர் கொலம்பானி, பிரெஞ்சு கலாச்சாரம் மையம் நடத்துவதற்காக தானமாக இடத்தையும், இந்த சிலைகளையும் கொடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 1980-ம் ஆண்டு சிலையை வைத்து இருந்த பிரெஞ்சு நாட்டு அதிகாரி, பிரான்ஸ் நாட்டிற்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது,1972 தொல்பொருள் மற்றும் கலை கருவூலங்கள் சட்டத்தின் அடிப்படையில், தொன்மையான சிலைகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், பாண்டிச்சேரியில் அவரது மகன் கொலம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாக தெரிய வந்துள்ளது.
image
அடுத்த ஆண்டு கொலம்பானி இறந்த பிறகு, தொடர்ந்து அவரது மகன் ஜோன்ஸ் பியர் கொலம்பானி வைத்திருந்ததாகவும்,தொன்மையான பொருள் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜோன்ஸ் பியர் கொலம்பானி, தனியார் பிரெஞ்சு கலாச்சார மையத்திடம் தானமாக நிலங்கள் வழங்கும்போது, இந்த 3 சிலைகளையும் கொடுத்து சென்றதும் உறுதியானது. ஆனால் இந்த சிலைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இல்லை என்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
மீட்கப்பட்ட சிலைகள் தொன்மை வாய்ந்த நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகள் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள், தமிழக கோயில்களில் இருந்து 1980-க்கு முன்பாக களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும் என சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சந்தேகித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்த போது, கைப்பற்றப்பட்ட சிலைகள் 600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என்பது
தெரியவந்துள்ளது.
image
மேலும் சிலை வடிவமைக்கப்பட்ட விதத்தை வைத்து சோழர்கள் மற்றும் விஜய நகர பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சி காலத்தை சேர்ந்தவை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலைகள் குறித்து இந்து அறநிலையத் துறையிடம் ஆவணங்கள் உள்ளதா என தகவல்கள் கேட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மூன்று சிலைகளையும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சர்வதேச மதிப்பின் மூலம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகளை புதுச்சேரிக்கு கடத்தி வந்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.