கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் படம் உருவான விதம் குறித்து அவர் அளித்துள்ள நேர்காணல் இதோ…
“விஜய் ரசிகர் டு விஜய் பட இயக்குநர். இந்தப் பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் முதன்முதலில் தியேட்டரில் சென்று பார்த்த விஜய் படம் துள்ளாத மனமும் துள்ளும். அதன்பின் நீண்ட நாள் கழித்து வசீகரா பார்த்தேன். வசீகராவிலிருந்து தொடர்ந்து அவர் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். திருமலையிலிருந்து அவருடைய ரசிகன் ஆனேன். குருவி படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அடி வாங்கிய சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்ததுண்டு. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு படம் எடுத்தால் போதும். அது நன்றாக ஓட வேண்டுமென்று நினைத்தேன். அது போல கோலமாவு கோகிலா அமைந்தது. அதன் பிறகு நடப்பதெல்லாம் அதனுடைய போனஸ்தான்.”
“பீஸ்ட் உங்களின் முந்தைய படங்களில் இருந்து எப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும்?”
“என்னுடைய முந்தைய படங்களில் இருந்து பீஸ்ட் ஒரு வித்தியாசமான படம்தான். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால் பீஸ்ட் வேறு மாதிரி இருக்கும். ரொம்ப எமோஷன், பயங்கரமாக பழிவாங்குதல் இதுபோல இல்லாமல் எல்லாருக்கும் பிடித்த மாதிரி ஒரு பொழுதுபோக்கான ஆக்ஷன் படம் பண்ண வேண்டுமென்பதுதான் பீஸ்ட் பட ஐடியா. வீரராகவன் எனும் கேரக்டரை சுற்றி நடக்கும் விஷயங்களைப் படமாக எடுக்கப்பட்டதுதான் பீஸ்ட்.”
“நெல்சன் என்றாலே டார்க் காமெடி என்றொரு பிம்பம் உருவாகிவிட்டது. அது உங்களுக்கு எப்படி இருக்கிறது?”
“நான் ரெண்டு படமும் டார்க் காமெடி படம் எடுத்ததால அப்படி சொல்றாங்க. இதுவே நான் வேறு மாதிரி படம் எடுத்தால் வேற மாதிரி சொல்லப் போறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி யாரோ, பெஸ்ட் டைரக்டர் ஆப் டார்க் காமெடி – நெல்சன் என்று சொன்னாங்க. பெஸ்ட் டைரக்டர் கேள்விப்பட்டிருக்கிறேன். பெஸ்ட் கமர்ஷியல் டைரக்டர் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இது மாதிரி ஒரு விஷயம் எனக்கே புதிதாக இருந்தது. இப்போ நான் என்ன டைரக்டர் என்று எனக்கே தெரியாது.”
“இயக்குநர் செல்வராகவனை எப்படி இந்தப் படத்திற்கு தேர்வு செய்தீர்கள்?”
“செல்வராகவன் சார் தற்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றவுடன் தான் அவரைத் தேர்வு செய்தோம். மற்றப்படி அவர் நடிக்காமல் இருந்திருந்தால் எனக்கு நேரில் சென்று கேட்கக்கூட தைரியம் வந்திருக்காது. அவரை வைத்து பத்து நாள் தான் சூட்டிங் எடுத்தோம். ஆனால் அவர் படம் முழுவதும் வருவார். சூட்டிங்கின்போது ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டார். அவர் ஒரு பெரிய இயக்குநர் என்ற சிந்தனையே அவருக்கு இருக்காது. நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார். தப்பா சொன்னாலும் தப்பாவே நடித்து விடுவார். ஒரு சீனை மாற்றலாம், குறைக்கலாம் என்று எதுவுமே சொல்ல மாட்டார். வந்து நடித்துக்கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்.”
“ரீல் லைப் விஜயைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அவர் ரியல் லைஃப் இல் எப்படி இருப்பார்?”
“விஜய் சார் சினிமாவில்விட நேரில் ரொம்ப ஸ்டைலா இருப்பார். ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் விடிவி கணேஷ், கிங்ஸ்லி, சதீஷ் என்று எங்கள் குழுவே காமெடியாக கலாய்த்துக்கொண்டிருப்போம். எங்களோடு அவரும் இணைந்து கலகலப்பாக இருப்பார். ஒரு சில சமயம் சிரிக்கமுடியாமல் பாதியில் எழுந்தெல்லாம் போயிருக்கார். ஸ்பாட்டிற்கு காலையில் ஏழு மணிக்கே வந்துவிடுவார். அவர் வந்த பிறகுதான் நானே போவேன். ஷாட் முடிந்துவிட்டாலும் ஸ்பாட்டிலேயே இருப்பார். அதிகமாக கேராவேனுக்கே போக மாட்டார்.”
“பீஸ்ட் படத்தின் கதையை வைத்து அதை வேறு ஒரு படத்தோடு ஒப்பீடு செய்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”
“ஹைஜாக்கிங் கதையெல்லாம் 1940 காலகட்டத்திலேயே வந்துவிட்டது. ஒவ்வொரு கடத்தலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இப்படி பார்த்தால் லவ் ஸ்டோரி எல்லாமே டைட்டானிகா? பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. நாம என்ன எடுத்திருக்கோம் என்பது நமக்கு தெரியும். நீங்க என்னப் படம் எடுத்தாலுமே அதை கம்பேர் செய்யலாம். அதனால் அதெல்லாம் ஜாலியாக எடுத்துக்கொண்டு கடந்து விடலாம்.”