அதிக விலைகொடுத்து வாங்கிய ஆடைகளிலும், மிகவும் விரும்பும் ஆடைகளிலும் கறை பட்டுவிட்டால், மனது ஏற்றுக்கொள்ளாது. சில கறைகளை, சில வழிமுறைகள் மூலம் நீக்கிவிட வாய்ப்பிருக்கிது. அதற்கான வழிகாட்டல் இங்கே. ஆனால், ஒரே முயற்சியில் கறை நீங்கும் என்று உத்தரவாதம் இல்லை. கறை நீங்கும் வரை அதை தொடர்ந்து சில வாஷ்களுக்குச் செய்ய வேண்டி வரலாம். மேலும், கறை இருக்கும் துணிகளை அயர்ன் செய்தால் அந்தக் கறை இன்னும் நன்றாக செட் ஆகிவிடக்கூடும் என்பதால், அதை தவிர்க்கவும். டீ முதல் இங்க் வரை… கறைகள் நீக்கும் டிப்ஸ் இங்கே…
தேநீர் கறை
ஆடையில் தேநீர் பட்டுவிட்டால், கூடிய விரைவில் குளிர்ந்த நீரில் கறையை அலசவும். கவனிக்க, கறை பட்ட பக்கத்தின் பின்பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்றி அலசும்போது, கறை படிந்த பக்கத்திலிருந்து அது நீங்க வழிவகை செய்யப்படும். மாறாக, கறை படிந்த பக்கத்திலேயே தண்ணீரை ஊற்றினால், அடிப்பக்கமும் அது இறங்க வாய்ப்பாக அமையலாம். அலசிய பின், ஒரு லிக்விட் டிடர்ஜென்ட்டை கறை பட்ட இடத்தில் விட்டு, தேய்க்கவும். ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் அந்தத் துணியை சோப்புத் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்திருந்து அலசவும். பேக்கிங் சோடா பயன்படுத்தியும் தேநீர் கறையை நீக்கலாம்.
மை கறை
மாணவர்களுக்கு ஆடைகளில் ஏற்படும் கறைகளில் முக்கியமானது, மை கறை. அதை முதலில் குளிர்ந்த நீரில் அலசவும். பின்னர், லிக்விட் டிடர்ஜென்ட் பயன்படுத்தி வெந்நீரில் ஊறவைக்கவும். சிறிது அமோனியா சேர்க்கவும். கறையில் மெதுவாகத் தேய்க்கவும். 30 – 60 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் கறை பட்ட இடத்தில் கவனம் கொடுத்து தேய்த்து, துணியை அலசவும். இவ்வாறு செய்தும் நீங்கவில்லை எனில், தொடர்ந்து சில வாஷ்களுக்கு இந்த முறையை பின்பற்றவும்.
எண்ணெய் கறை
தலைக்கு எண்ணெய் வைத்த பின் படுப்பதால், எண்ணெய்க் கறையாகிவிடும் தலையணை உறைகள் பற்றி கவலை வேண்டாம். ஷாம்பூ அல்லது லிக்விக் டிடர்ஜென்ட் பயன்படுத்தி அந்தக் கறையை நீக்கிவிடலாம். கறை பட்ட இடத்தில் ஷாம்பூ அல்லது லிக்விட் டிடர்ஜென்ட்டை அப்ளை செய்து தடவி, படர்ந்திருக்க விடவும். அலசிவிட்டு, வழக்கம்போல துவைக்கவும். கறை நீங்கிவிடும். அல்லது, வெள்ளை சாக்பீஸை எண்ணெய்க் கறை மீது வைத்து தேய்க்க, அது கறையை அகற்ற உதவும். 15 நிமிடங்கள் சாக்பீஸ் துகள்களை விடவும். பின்னர் வழக்கம்போல அலசலாம்.
கிரீஸ் கறை
சமையல் வேலைகளின்போதும், வெளிவேலைகளின்போதும் ஆடையில் படும் கிரீஸ் கறைகளை நீக்க, சோளமாவை பயன்படுத்தலாம். சோளமாவை கறை பட்ட இடத்தில் தூவிவிடவும். பின்னர் பிரஷ் கொண்டு அதை தேய்த்து நீக்கவும். பின்னர் வழக்கம் போல துவைக்கவும். வாஷிங் மெஷின் என்றால் டிரையர் பயன்படுத்தாமல் தவிர்ப்பது பரிந்துரைக்கத்தக்கது.
காலர் கறை
வியர்வையும் அழுக்கும் சேர்ந்து காலரைச் சுற்றி ஏற்படுத்தும் கறை கடினமானதாக இருக்கும். அதற்கு பிரஷ் போடுவதற்குள் சோர்வு ஏற்படும் அளவுக்கு, சிலரது சட்டைகளில் நாள்பட்டதாகப் படிந்துபோயிருக்கும். அதை அகற்ற, நம் பாத்ரூமில் உள்ள ஒரு பொருளே போதும் என்றால் நம்ப முடிகிறதா? அது, ஷாம்பூ!
காலரில் சிறிது ஷாம்பூ ஊற்றி, பிரஷ் கொண்டு நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 15 – 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின் அலசி, வழக்கம்போல சோப் பவுடர் நீரில் ஊறவைத்து, பிரஷ் போட்டு தேய்த்துத் துவைக்கவும். குறிப்பாக, ஆய்ல் ஃப்ரீ ஹேர்க்கான ஷாம்பூவை பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
ரத்தக் கறை
ஆடைகளில் படிந்த ரத்தக் கறையை அகற்ற, 3 சதவிகித ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்தவும். இது, மருந்தகங்களில் முதலுதவிப் பெட்டியில் கிடைக்கும். ரத்தக் கறை பட்ட இடத்தில் பெராக்சைடை விட்டு, ஊறவிடவும். பின்னர் அலசவும். ரத்தக் கறை பட்டவுடன் விரைவாக இதை செய்யும்போது கறையை நீக்குவது எளிமையாவும். அதேபோல, சோடா பயன்படுத்தியும் ரத்தக் கறையை நீக்கலாம். கோலா/சோடாவில் ஓர் இரவு ஊறவைத்து, மறுநாள் துவைக்கலாம். இன்னொரு முறையில், டேபிள் சால்ட்டை ரத்தக் கறையில் தூவித் தேய்த்தும் கறை நீக்க முயற்சிக்கலாம்.
இன்ஸ்டன்ட் ரிமூவர்
பார்ட்டி, விசேஷம் என முக்கியமான இடத்தில் இருக்கும்போது, ஆடைகளில் ஏதேனும் கறை பட்டுவிட்டால், அதைக் கையாள்வது பற்றிப் பார்ப்போம். முதல் விஷயம், அந்தக் கறையை அகற்றுவதாக நினைத்து, மேலும் மேலும் தேய்த்து அதை ஆடை முழுக்கப் பரப்பாதீர்கள். ஒரு டிஷ்யூ கொண்டு, சாஸ், கிரீஸ் என கறையாக்கிய பொருளை மேற்கொண்டு பரவாமல் அழுந்தத் தேய்த்து எடுத்துவிடுங்கள். பின்னர் தண்ணீர், எலுமிச்சை சாறு, அல்லது சோடா என எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு கழுவலாம்.