பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் ஒரு ரஷ்ய ஆதரவாளர் என்பதைக் காட்டுவது போல் அமைந்துள்ளன அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட்டுள்ள விடயங்கள்.
ரஷ்யா உக்ரைனுக்கிடையிலான போர் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்ட உடனே, நேட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் லீ பென்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மேக்ரானிடம் லீ பென் தேர்தலில் தோற்றபோது, கிரெம்ளினில் லீ பென்னை இரு கரம் நீட்டி வரவேற்றார் புடின்!
அப்போது தானும் புடினும் பல ஒருமித்த கொள்கைகள் கொண்டுள்ளதாக அறிவித்த லீ பென், புடினை பாராட்டு மழையில் நனைத்தார்.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், தனக்கும் புடினுக்கும் உள்ள உறவை வெளிப்படையாக தெரிவிக்காமல், கொஞ்சம் மாற்றிப் பேசிய லீ பென், வெளிநாடுகள் குறித்த விடயத்தில் தான் தனிப்பட்ட கருத்துக்கள் கொண்டுள்ளதாக அந்தர் பல்டி அடித்தார்.
ஆனால், நம்பிக்கைக்குரிய ஒருவராக தன்னை உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயலும் லீ பென்னின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், திடீரென எதிர்ப்பாளர் ஒருவர், லீ பென் மற்றும் புடின் இருவரும் இருக்கும் இதய வடிவ படம் ஒன்றைக் காட்ட, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக, அந்த எதிர்ப்பாளர் பாதுகாவலர்களால் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
மேலும், அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ் மேற்கொள்ளும் இராணுவப் பயிற்சிகளைக் கைவிட விரும்பும் தன் நோக்கத்தையும், லீ பென் தனது பிரச்சாரத்தின்போது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.